கோவை: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கும் அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கும் இனிப்புகள், பழரசங்கள் வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
இஸ்லாமிய மக்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபி திருநாளாக இன்று இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். கோவை நகரில் இஸ்லாமியப் பெருமக்கள் உற்சாகத்துடன் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
நபிகள் நாயகத்தின் நற்போதனைகளையும் தியாகங்களையும் நினைவுகூரும் வகையிலும், மிலாது விழாவை கோலாகலமாகக் கொண்டாடும் வகையிலும் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களும் வர்ணக் கொடிகளாலும், வண்ணமயமான மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மைல்கல் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த அரபி பாடசாலையில் படிக்கும் இஸ்லாமிய குழந்தைகள் நபிகள் நாயகம் தியாகங்களை போற்றும் விதமாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
அக்குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குளிர்பானங்கள், பழரசங்கள், பிஸ்கட், மற்றும் குடிதண்ணீர் உட்பட உணவு பொருட்களை வழங்கினார்.




