கோவை: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், கோவை போத்தனூரில் உள்ள அரசன் திரையரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படம் பார்த்தார்.
ஜனநாயகன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன்பு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆடிப்பாடி உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை போத்தனூரில் உள்ள அரசன் திரையரங்கிலும் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டு, விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடியும், முழக்கங்களை எழுப்பியும் கொண்டாடினர்.
இந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்கிற்கு வந்தார். அப்போது தன்னை யாரும் வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபடி திரையரங்கிற்குள் சென்றார்.
அமைச்சரின் வருகையையொட்டி, திரையரங்கைச் சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். சில போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனர்.
வீடியோ
அமைச்சர் உள்ளே சென்ற பாதையில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திரையிடல் தொடங்கியதும், “மாண்புமிகு முதலமைச்சர் விஜய்” என்ற டைட்டில் திரையில் தோன்றியவுடன் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, விசில் அடித்தும், நடனமாடியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.





