‘ஒரு துளி விஷம்’…. துரைமுருகன் பேத்தியின் ஆடம்பரத் திருமணத்தில் இதை கவனித்தீர்களா? கடுப்பில் திகவினர்!

கோவை: திமுக மூத்த தலைவர் துரைமுருகன் இல்லத் திருமண விழா திமுகவினரையும், திராவிட கழகத்தினரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

ஆடம்பர திருமணம்

திமுகவின் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமாக இருப்பவர் துரைமுருகன். இவரது மகனும், வேலூர் தொகுதி திமுக எம்பியுமான கதிர் ஆனந்தின் மகள் செந்தாமரை. இவருக்கு பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவியுடன் கடந்த நவம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது. இதில், பல்வேறு முன்னணி அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் முன்னாள் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல, நடிகர்கள் தனுஷ், பிரபு, சரத்குமார், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, நெப்போலியன், வடிவேலு, ஹிப்ஹாப் ஆதி, மீனா, அபிராமி, அம்பிகா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணத்தில் யுவன்சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரியும் அனைவரையும் கவர்ந்தது. ஆன்ட்ரியா, மனோ உள்ளிட்ட பிரபலங்களும் பாடல்களை பாடி அசத்தினர். இது ஒருபுறம் இருக்க மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் விருந்தும் வந்திருந்தவர்களை கமகமக்கச் செய்தது.

Advertisement

திருமணம் நடந்தது முதல் தற்போது வரை சமூக வலைதளங்களை திறந்தாலே இவர்களின் திருமணப் பற்றிய வீடியோக்களும், போட்டோக்களும், பேச்சுக்களும் தான் இருந்து வருகின்றன. இருவரின் திருமண பத்திரிக்கைகளும் பெரிதும் பேசப்பட்டன.

இவ்வளவு ஆடம்பரமாக நடந்த இந்தத் திருமணம், தமிழகத்தில் நடந்த பிரமாண்ட திருமணங்களில் ஒன்றாக மாறியது.

சுயமரியாதை எங்கே?

அடேங்கப்பா என்று பலரது வாயை பிளக்கச் செய்யும் அளவுக்கு இருந்தாலும், துரைமுருகனின் இந்த இல்லத்திருமணம் திராவிடர் கட்சியினரிடையே முகம் சுழிக்கவே செய்துள்ளது. மாறிமாறி அதிருப்தி அறிக்கைகளை திராவிட கட்சியினர் பறக்க விட்டு வருகின்றனர்.

சுயமரியாதை திருமணத்தை வலியுறுத்தி வரும் திமுக, அதனை சட்டமாக்கியாகவும் பெருமை பேசி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், துரைமுருகனின் பேத்தி திருமணம், சமஸ்கிருதத்தில் வேத மந்திரம் முழங்க, சனாதன முறைப்படி நடந்தது தான் திமுகவினரையும், திராவிட கழகத்தினரையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கியுள்ளது.

இதயம் வலிக்கிறது

திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் முதல் ஆளாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதில் அவர் விடுத்தப் பதிவில்,’என்னிடம் பேரன்பு காட்டும் – தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில், சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் என் இதயம் வலிக்கிறது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடன்படவில்லை

தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார் வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவில், ‘மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய, கொள்கை பிடிப்புள்ள கட்சியில், அதை கடைப்பிடிக்க கூடிய வாய்ப்பை தவறவிட்டதில், தனிப்பட்ட முறையில் நான் உடன்படவில்லை’ என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இவை அனைத்திற்கும் மேலாக தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்ட மிக நீண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; திமுகவின் பொதுச் செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்தியும், வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மகளுமான செந்தாமரை திருமணம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

வேதனையும், வெட்கமும்

இந்நிலையில், நவம்பர் 1 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணம் பற்றி, ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.

இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர். இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.

இழுக்கைத் தேடித் தரலாமா?

புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் திமுக தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக? அதுவும், திமுகவில் இரண்டாவது பொறுப்பில் பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், திமுக தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?

ஒரு துளி விஷம்…

துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் திமுகவில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?

தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம். புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!

75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.

சுயமரியாதைத் திருமண முறையை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதல்வர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்

வெறும் வாய்க்குக் கிடைத்த அவல்

புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதல்வராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா? எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எது கிடைக்கும், திமுகவைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?

திமுக தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது தடுப்பது மிகவும் அவசியம், அவசரம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேத்தியின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்புக்கும், விமர்சனத்திற்கும் துரைமுருகன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

சிகப்பு பிடிக்கல, புளூ தான் வேணும்” – கோவையில் விசித்திரத் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு!

கோவையில் திருடிய சிவப்பு நிற R15 பைக்கை விட்டுவிட்டு, நீல நிற பைக்கைத் திருடிச் சென்ற நபரை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...