கோவை: பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படாத நிலையில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் ரயில்வே துறைக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீளமேடு ரயில் நிலையம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் இதுவரை பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக, மேம்பாலத்தின் கீழ் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பீளமேடு சுற்றுவட்டார பகுதி மக்கள் ரயில்வே துறைக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read : ராம் சரணுக்கு கோவையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை… எப்போது டிஸ்சார்ஜ்?
இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால் கூறுகையில்,
“மாவட்ட நிர்வாகம் இதுவரை நிலத்தை கையகப்படுத்தாததால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.
சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் மற்றும் சென்னை நெடுஞ்சாலைத்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். 26 பேர் உயிரிழந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், கோவை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்திலும் நின்று சென்றால், சுமார் 2 லட்சம் பேர் பயனடைவார்கள்.
இப்பகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல கல்வி நிறுவனங்கள் உள்ளதால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கியுள்ளோம்.
பிளாட்பாரத்தை அகலப்படுத்தி ரயில்கள் நிற்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை அதற்கான டெண்டர் விடப்படவில்லை.
பீளமேடு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தராவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.





