கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே இளைஞர்கள் கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளமடை கிழக்குத் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் – கிரிஜா தம்பதியின் இளைய மகன் பிரதீப் குமார் (34). கூலித் தொழிலாளியான இவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
கடந்த 17-ஆம் தேதி இரவு, வெள்ளமடை பூங்கா நகரைச் சேர்ந்த சிலர் பிரதீப் குமாரை சோமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்டன் அருகேயுள்ள காலியிடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவரை அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், தகவல் அறிந்து சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து பிரதீப் குமாரின் தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக பூங்கா நகரைச் சேர்ந்த கார்த்திக் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவா (24) ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரதீப் குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸார், சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.





