கோவை: செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகக் கூறி, போலீஸ் அதிகாரி போல பேசி ஒருவரை மிரட்டி ரூ.38 ஆயிரம் பறித்த இரு வாலிபர்களை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை துடியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (50) என்பவரை கடந்த மே 15-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டார். அவர், பீளமேடு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, ஜெகதீசன் செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளார். இதனால் பதற்றமடைந்த ஜெகதீசன், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என கூறியுள்ளார். அதற்கு, கைது செய்யாமல் இருக்க வேண்டுமெனில் பணம் அனுப்ப வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஜெகதீசன், மர்ம நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ஜி-பே (GPay) மூலம் ரூ.38 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் கூறியபோது, இது சைபர் மோசடி கும்பலின் வேலை என்பது தெரியவந்தது. அதன்பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீசன், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை பச்சாபாளையத்தைச் சேர்ந்த சபரி (25) மற்றும் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த வினு (21) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்ற மிரட்டல் அழைப்புகள் வந்தால் பதற்றமடையாமல் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை தொடர்புகொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





