கோவை: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர் கூட்டமைப்பினர் அமைச்சர் சம்பத்குமார் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆட்சி அமைவதற்கு முன்பு தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த தற்போதைய அமைச்சர் சம்பத்குமார், தற்போது இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் கூட்டமைப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வரும் தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், டி.பி.சி. பணியாளர்கள், மலேரியா தடுப்புப் பணியாளர்கள், சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேலும், 2017ஆம் ஆண்டு அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.798 ஊதியம் வழங்க வேண்டும். டி.பி.சி. பணியாளர்களைத் தனியார் தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைக்கும் மாநகராட்சி மன்றத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. கூட்டமைப்பில் இல்லாத பணியாளர்கள் மட்டுமே தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் வழக்கத்தைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே பணியில் ஈடுபட்டுள்ளதால், மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு தோய்வுடன் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறுகையில், தூய்மைப் பணியாளர்கள் ஏற்கெனவே கூடுதல் பணிச்சுமையுடன் பணியாற்றி வருகின்றனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
மாநகராட்சி ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில்கூட, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாகவே தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியம் வங்கிக் கணக்கில் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு, தற்போதைய அமைச்சர் சம்பத்குமார் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததாகவும், ஆனால் தற்போது அவர் எதுவும் பேசாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
மாநகராட்சித் துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.






