கோவை: செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில், கோவை செம்மொழி பூங்கா திட்டம் முதலில் சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டதாகவும், பின்னர் கூடுதல் மதிப்பீடு என்ற பெயரில் ரூ.40 கோடிக்கும் மேல் மாநகராட்சி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விலைப்பட்டியலில் இடம்பெறாத பொருட்களுக்கு அதிக மதிப்பீடு வழங்கப்பட்டு, போலி விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.80 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Also Read: உலா வரும் காட்டுப் பன்றிகள்… அச்சத்தில் வடவள்ளி மக்கள்- video
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை நிபுணர்கள், தனியார் வல்லுநர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகள் மூலம் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டால், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில சாலைப் பணிகளிலும் தரக்குறைவு மற்றும் போலி பில் மூலம் நிதி முறைகேடு நடந்திருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, கடந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் மறுஆய்வு செய்து, அவற்றின் தரம், அளவு மற்றும் செலவினங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்றும், முறைகேடு உறுதியானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் தனது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளது.





