கோவை : சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் பைக் சீட்டில் வைக்கப்பட்டிருந்த செல்போனை திருடி தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் மேற்கு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (32), தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் மதுரையில் இருந்து பேருந்தில் வரும் தனது நண்பரை வரவேற்பதற்காக சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே காத்திருந்தார்.
அப்போது தனது செல்போனை பைக் சீட்டின் மீது வைத்திருந்தார். பின்னர் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென பைக் சீட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றார்.
Also Read: Coimbatore Weather Report: கோவையில் இந்த வாரம் 3 நாட்கள் மழை… எப்போது?
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இசக்கிபாண்டி சத்தம் போட்டு அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார். பின்னர் அவரை சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், செல்போனை திருடியது போத்தனூர் கால்வாய் பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இசக்கிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைத்தனர்.





