கோவை : கோவை சூலூரில் இ-சேவை மையம் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்தி, இளம் பெண்ணிடம் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி செல்போனை வாங்கிச் சென்ற நபர், டவர் கிடைக்கவில்லை எனக்கூறி அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை சூலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கண் கண்ணாடி விற்பனை கடைக்கு நேற்று டிப்டாப் உடையில் நபர் ஒருவர் வந்துள்ளார். அங்கு இருந்த இளம் பெண்ணிடம் அருகில் உள்ள இ-சேவை மையம் எப்போது திறக்கப்படும் என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளம் பெண், காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் இ-சேவை மையம் மூடப்பட்டுள்ளதாகவும், விடுமுறை முடிந்த பின்னரே திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது அந்த நபர், இ-சேவை மைய உரிமையாளருக்கு நன்கு தெரிந்தவர் போல இயல்பாக பேசியுள்ளார். தொடர்ந்து, தனக்கு முக்கியமான வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை அனுப்ப வேண்டியுள்ளதாகவும், அந்த பெண்ணின் செல்போனில் வாட்ஸ்அப் உள்ளதா என்றும் கேட்டுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய அந்த இளம் பெண், உதவி செய்யும் நோக்கில் தனது செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார்.
செல்போனை வாங்கிய அந்த நபர், கடைக்குள் சரியாக டவர் கிடைக்கவில்லை என்றும், வெளியே சென்று வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு செல்போனை திரும்பக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
Video
இதனை நம்பிய அந்த இளம் பெண், அவர் வெளியே சென்று வருவார் என காத்திருந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் வெளியே வந்து பார்த்தபோது, செல்போனுடன் அந்த நபர் தப்பிச் சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அந்த நபர் இளம் பெண்ணிடம் பேசி செல்போனை வாங்கிச் செல்லும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், முன்பின் தெரியாத நபர்களிடம் உதவி என்ற பெயரில் செல்போனை வழங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
Sulur man allegedly steals young woman’s mobile using WhatsApp message excuse, CCTV footage emerges





