புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது காணலாம்.

அனைவருக்கும் கார்…

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே ஹாட் டாப்பிக்காக இருப்பது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டது தான். கூட்டணி கட்சியான விசிகவின் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான பிறகு, ‘நான் எனக்காக கேட்கவில்லை. அனைத்து எம்எல்ஏக்களாகவும் தான் கேட்டேன்,’ என்று ஜோதிமணி ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.

Advertisement

கார் தொடர்பாக சட்டசபையில் பேசிய மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சண்முகன், ‘இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும்,’ என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு தவெக எம்எல்ஏவான சபரி ஐங்கரன் பேசியது சட்டசபையில் கலகலக்கச் செய்தது. ‘கல்லூரியில் படிக்கும் போது காதல் தோல்வியடைந்தது. அப்போது வேலையும் இல்லை, காரும் இல்லை. இப்போது, எங்களின் முதல்வர் வேலையும் கொடுத்து, காரும் கொடுத்து இருக்கிறார்,’ என்று நகைச்சுவையாக பேசியிருந்தார்.

எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லாத முதல்முறை எம்எல்ஏக்களாக வந்துள்ள பலருக்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.

Advertisement

விமர்சனங்கள்

அதேவேளையில், எதிர்ப்புகளும் மலைபோல குவிந்து வருகின்றன. முதல்வர் அறிவிப்பை வெளியிட்ட மறு கணமே, “தமிழக அரசுக்கு ஏற்படும் வீண் செலவுகளைக் குறைக்க திமுக எம்எல்ஏக்கள் 59 பேருக்கு கார் வேண்டாம்,” என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து விட்டார். அதேபோல, கோடிக்கணக்கான சொத்துக்களும், ஆடம்பரமான கார்களை வைத்திருக்கும் எம்எல்ஏக்களுக்கு, மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்கலாமா? என்று பொதுமக்கள் மத்தியிலும் விமர்சனங்களை எழச் செய்தன. கார் வழங்குவதோடு, கார் பராமரிப்பிற்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம், எம்எல்ஏவுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் ஒரு உதவியாளர் போன்றவை வெட்டிச் செலவு என்று கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, எம்எல்ஏக்களுக்கு கார் தேர்வு செய்வதற்கு வசதியாக, முதற்கட்டமாக இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மஹிந்திராவின் சொகுசு கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக சென்னை தலைமை செயலகம் கொண்டு வரப்பட்டன. XUV, 7XO, பொலிரோ நியோ உள்ளிட்ட கார்கள் அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. கார்களின் மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள், பராமரிப்பு செலவுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, எந்தக் காரை வாங்குவது என்பது குறித்து இறுதி செய்யப்பட இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழக எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது காணலாம்.

54 பேர்…

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்தது மற்றும் முதல்வர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது என மொத்தம் 7 தொகுதிகள் காலியாகியுள்ளன. எனவே, தற்போதைய சட்டசபையின் பலம் 227 ஆக உள்ளது. இவர்களில் ஒட்டுமொத்தமாக கார் இல்லாத எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 54 ஆகும். அவர்களில் 32 பேர் தவெகச் சேர்ந்தவர்கள்.

இதற்கு அடுத்தபடியாக 59 திமுக எம்எல்ஏக்களில் 9 பேரிடம் கார் இல்லை. 41 அதிமுக எம்எல்ஏக்களில் 8 பேரிடமும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், விசிக, பாமக கட்சிகளில் தலா ஒரு எம்எல்ஏக்களிடம் கார் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்களுக்கே…

இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால், பலமுறை அமைச்சர்களாக இருந்த அதிமுக, திமுகவைச் சேர்ந்த சீனியர் அரசியல்வாதிகள் தங்களிடம் கார் இல்லை என்று தங்களின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி. அதேபோல, கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி, திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோரும் தங்களிடம் கார் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய தவெக அமைச்சர்களான மரிய வில்சன், ரமேஷ், வினோத் ஆகியோரும் கார் இல்லை என்று வேட்புமனுவில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

சந்தை மதிப்பு

தமிழக சட்டசபையில் உள்ள மொத்தம் 227 எம்எல்ஏக்களிடமும் ஒட்டுமொத்தமாக 396 எண்ணிக்கையில் கார்கள் உள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.89 கோடியாகும். அதாவது, 173 எம்எல்ஏக்கள் குறைந்தது ஒரு காராவது வைத்துள்ளனர். 54 பேரிடம் கார் இல்லை. சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்களில் தவெக, அதிமுக மற்றும் திமுக கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களிடம் மட்டும் 91.9 சதவீதம் கார்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தனித்தொகுதியைச் சேர்ந்த 44 எம்எல்ஏக்களிடம் ஒட்டுமொத்தமாகவே 45 கார்கள் தான் உள்ளன. இதில், 14 பேரிடம் ஒரு கார் கூட இல்லை.

டாப் 5 எம்எல்ஏக்கள்

5க்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14 ஆகும். அவர்களில் தவெகவைச் சேர்ந்தவர்கள் 7 பேர். அதிமுகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்களும், திமுக, காங்கிரஸைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களும் அதிக கார்களை வைத்துள்ளனர்.

இதில், அதிக எண்ணிக்கையில் கார்களை வைத்திருக்கும் டாப் 5 எம்எல்ஏக்களின் விபரத்தை தற்போது காணலாம். முதலிடத்தை கோவை கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ கனிமொழி தான் உள்ளார். இவரிடம் சொந்தப் பயன்பாட்டுக்காக ரூ.2.79 கோடி மதிப்பில் 12 கார்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல், டெம்போ உள்பட 14 வணிகப்பயன்பாட்டு வாகனங்களும் வைத்துள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் பழனி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவி மனோகரன் ரூ.3.4 கோடி மதிப்பில் 10 கார்களும், விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் ரூ.2.7 கோடி மதிப்பில் 9 கார்களையும் கொண்டுள்ளார். அதேபோல, லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ரூ.2.1 கோடி மதிப்பில் 9 கார்களும், காரைக்குடி தவெக எம்எல்ஏ டி.கே. பிரபு ரூ.2.1 கோடி மதிப்பில் 8 கார்களையும் வைத்துள்ளனர்.

முதல்வர் விஜய் ‘நம்பர் ஒன்’

இவர்களில் அதிக விலையுள்ள கார்களைக் கொண்ட டாப் 5 எம்எல்ஏக்களின் பட்டியலை காணலாம். முதலிடத்தில் முதல்வர் விஜய் தான் உள்ளார். அவரிடம் ரூ.3.02 கோடி மதிப்புள்ள டொயோட்டா லெக்ஸஸ் 350 ரக காரை வைத்துள்ளார். 2வது இடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார். அவரிடம் ரூ.2.19 கோடி மதிப்பிலான லேண்ட் க்ரூசர் உள்ளது.

3வது மற்றும் 4வது இடத்தில் மீண்டும் முதல்வர் விஜய் இருக்கிறார். ரூ.2.01 கோடியில் பிஎம்டபுள்யூ ஐ7ம், ரூ.1.63 கோடியில் டொயோட்டோ வெல்ஃபையர் காரும் வைத்துள்ளார். 5வது இடத்தில் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், லெக்ஸஸ் எல்.எக்ஸ் 570 கார் வைத்துள்ளார்.

சிந்தித்து செயல்படவும்..

என்னதான் வேட்புமனுக்களில் கார்கள் இல்லை என்று எம்எல்ஏக்கள் குறிப்பிட்டிருந்தாலும், நிஜத்தில் அவரவர் வசதி என்ன என்பது பொதுமக்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது வேட்புமனுவில் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். காரே இல்லை எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், அரசு கொடுத்த இன்னோவா காரில் பயணிக்காமல், சொகுசான டிபண்டர் காரைத் தான் பயன்படுத்தினார். அதேபோல, தற்போதைய முதல்வர் விஜய்யும் பதவியேற்பு நாளில் மட்டும் தான் அரசு காரில் பயணித்தார். அதன்பிறகு, பிஎம்டபுள்யூ, லெக்சஸ் என தினமும் ஒரு காரில் தான் பயணித்தார். அதேபோல, ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன் போன்றவர்களும் சொந்த கார்களில் தான் பயணிக்கின்றனர்.

நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவித்து வரும் நிலையில், எம்எல்ஏக்களில் 80, 90 சதவீதம் பேர் சொந்தமாக கார் வைத்துள்ள நிலையில், அரசு கொடுக்கும் இந்தக் கார் பத்தோட பதினொன்றாக இருக்குமே தவிர, அது அவர்களின் பயன்பாட்டுக்கு தேவையானதாக இருக்காது. எனவே, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தில் அரசு தனது முடிவை ஒருமுறை பரிசீலிக்கலாம் என்கின்றனர் விமர்சகர்கள். கார் பராமரிப்புப்படி போன்றவை வழங்குவதற்கு மாறாக, மானிய விலையில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் முடிவை பற்றியும் யோசிக்கலாம் என்கின்றனர்.

எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பு வெளியான உடன், எங்களுக்கும் பைக் வழங்க வேண்டும் என்று உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்ததை நாம் பார்க்கலாம். இதுபோன்று ஒவ்வொரு தரப்பினரும் கார், பைக், ஸ்கூட்டி எனக் கேட்டு வந்தால், தவெக அரசு சொல்லி வந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, திராவிட கட்சிகளே பரவாயில்லை என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே, முதல்வர் விஜய் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ; கோவை மாநகராட்சி அறிக்கை!

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீயணைப்பு பணியில் பல்வேறு வாகனங்கள் மற்றும் 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...