கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை மாநகராட்சி 99-வது வார்டுக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில், உரக்கிடங்கின் பின்புறம் உள்ள சுமார் 3.1 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரை கழிவுகள் இருந்த பகுதியில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று (23.08.2026) அதிகாலை சுமார் 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். இதுதொடர்பாக D3 போத்தனூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
தீ பரவிய பகுதிகளில் ஹிட்டாச்சி வாகனங்கள் மூலம் குப்பைகள் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டதுடன், தண்ணீர் பீய்ச்சியும், தேவையான இடங்களில் மண் கொட்டியும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
தீயணைப்பு மற்றும் தடுப்புப் பணிகளுக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் 8 வாகனங்கள், கோவை மாநகராட்சியின் 7 குடிநீர் லாரிகள், 7 ஹிட்டாச்சி மண் அகற்றும் வாகனங்கள் மற்றும் 8 தனியார் குடிநீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன.
மேலும், கூடுதல் உதவி கோரப்பட்டதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சியிலிருந்து 3 தண்ணீர் வாகனங்களும், பொள்ளாச்சி நகராட்சியிலிருந்து 3 தண்ணீர் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்தப் பணியில் 100 மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் சம்பவ இடத்திலேயே ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இரவு நேரத்திலும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர். உயர்மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டதுடன், கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
காவல்துறையின் “வருண்” தண்ணீர் பீய்ச்சும் வாகனம் மூலமும் தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீ பாதித்த பகுதிகளை தனித்தனியாக பிரித்தல், தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சுதல், மண் கொட்டுதல் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து முகாமிட்டு நிலைமையை கண்காணித்து, தீயை அணைக்கும் முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.
இதனிடையே, வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நகர்நலப் பிரிவை சேர்ந்த 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் பொதுமக்களிடம் சுவாசக் கோளாறு தொடர்பான எந்தவிதமான பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (24.08.2026) வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்திற்கு சென்ற கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தீ மேலும் பரவாமல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாறு கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.





