கோவை : கோவை காந்திபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பெலித்தனை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (45), கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த ஓட்டலின் தரைத்தளத்தில் உள்ள அறையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (48) என்பவர் கடந்த 6-ம் தேதி வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கடேஸ்வரன் தங்கியிருந்த அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த மேலாளர் சதீஷ்குமார், அறையின் கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, வெங்கடேஸ்வரன் கட்டிலில் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேஸ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேஸ்வரன் எதற்காக கோவை வந்தார், அவரது மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






