கோவை: கோவையில் தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியம் 42 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் உயர்வு செய்து குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் உறுதியான அரசு கொள்முதல் விலையை வழங்க வேண்டும்,
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை கைவிட வேண்டும், தனியார் மயமாக்கல் மற்றும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,
பொது கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு LPF, HMS, CITU, AITUC, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.





