கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
கோவை மட்டுமல்லாது அண்டை மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில், இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதனிடையே மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், செவிலியர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு இன்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில்,
சென்னைக்கு அடுத்த முக்கியமான மருத்துவமனையாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது.
இங்கு 300 மருத்துவர்களும், 500 செவிலியர்களும் மட்டுமே உள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வரும் இம்மருத்துவமனையில் தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் எலித் தொல்லை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் ஆய்வு நடத்தியும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இந்த சூழலில், அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும்.
இங்குள்ள கிரிஸ்டல் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் 650 தூய்மைப்பணியாளர்களுக்கு கணக்கு காண்பித்துவிட்டு, 300 தூய்மைப் பணியாளர்களை மட்டுமே நியமித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.





