கோவை: மதுபானக் கடைகளில் ஆன்லைன் விற்பனை எதற்காக என்று அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் புதிய ஆன்லைன்/டிஜிட்டல் முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், நீதிமன்ற அறிவுறுத்தல் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த உத்தரவை தான் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அதைச் சரியாகப் படித்த பிறகு கருத்து தெரிவிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டு மதுபானங்கள் கிடைத்து வருவதாகவும், இந்தத் துறையில் யாரும் முற்றுரிமை செலுத்தக் கூடாது என்பதால் வாடிக்கையாளர்கள் விரும்புவதைக் கொடுக்க முயற்சி செய்து வருவதாகவும், அது படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளி மாநிலங்களில் பிரபலமாக உள்ள மதுபானங்களை இங்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
பணப்புழக்கத்தைக் குறைத்து, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், பல காலமாக இருந்த பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் சில்லறைப் பிரச்சனைகளைக் குறைப்பதற்காகவுமே இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
சர்வர் பிரச்சனையைப் பரிசோதித்த அது நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் முதல் நாளே 700-க்கும் மேற்பட்டோர் இந்த முறையில் ஆர்டர் செய்து பெற்றுள்ளனர். இதில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது மது வாங்குவதை ஊக்குவிக்கும் செயல் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், மதுபானக் கடையில் நேரடியாக ஜி-பே (GPay) செய்து வாங்குவதைக் காட்டிலும், இந்த முறையைப் பயன்படுத்தி நீண்ட வரிசையில் நிற்காமல் வாங்கி வர முடியும் என்றும், இங்கு முழுமையாகப் பணமில்லா பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றும் விளக்கமளித்தார்.
மேலும், சில கடைகளில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்கள் இல்லாத காரணத்தினால், எந்தெந்த கடைகளில் எந்தெந்த மதுபானங்கள் இருப்பு உள்ளன என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளவே இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் யாரும் இது போன்ற முயற்சிகளை எடுக்கவில்லை என்றும், தங்கள் ஆட்சிக்கு வந்த பிறகே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மது என்பது பெரிய விஷயமல்ல என்பதை உணர்த்தவுமே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.





