கோவை: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம்முடைய ஆட்சி முறைக்கு சாத்தியமல்ல என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் எம்பி கார்த்திக் சிதம்பரம் விமானம் மூலம் கோவைக்கு வருகை புரிந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கப்பட்டிருப்பது குறித்தான கேள்விக்கு, அதனை முழுமையாக எதிர்ப்பதாகவும் அது சாத்தியமில்லாத ஒன்று எனவும் தெரிவித்தார். ஜனாதிபதி ஆட்சி முறையில் தான் Fixed Term இருக்க முடியும் ஆனால் நம்முடைய அரசியல் சாசனத்திற்கும் நம்முடைய ஆட்சி முறைக்கும் இது எதிரானது என தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கும்பொழுது செலவுகள் குறையும் என்று கூறுகிறார்கள் என தெரிவித்த அவர் இந்தியாவில் தேர்தலுக்கு அவ்வளவு செலவு ஆவதில்லை என்னைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஐந்து ஆறு தேர்தலில் நடப்பது நல்லது அடிக்கடி தேர்தல் வரும் போது தான் மக்கள் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் அரசியல் கட்சிகளும் அப்பொழுதுதான் விழிப்போடு இருப்பார்கள் இல்லையென்றால் மெத்தனப்போக்கோடு இருபார்கள் என தெரிவித்தார். மாநிலத் தேர்தலின் மூலமாக கூட மத்திய அரசுக்கு மக்கள் பாடங்களை புகட்டுவார்கள், அடிக்கடி தேர்தல் வந்தால் தான் மக்கள் அவர்களது அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்த முடிகிறது என தெரிவித்தார்.
பராசக்தி படம் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு சாரிடான் மாத்திரை தான் மிச்சம் என பதிலளித்தார். இன்றைய தினம் பராசக்தி பட குழுவினர் டெல்லியில் பிரதமர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளது குறித்தான கேள்விக்கு, நான் இரண்டு படங்களையும் (பராசக்தி, ஜனநாயகன்) பார்க்க போவதில்லை என்றும் திரைப்படத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசியலை யாராவது நிர்ணயம் செய்ய நினைத்தால் அது தவறு என்றார்.
திரைப்படத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசியலையோ மக்களின் எதிர்பார்ப்பையோ மனநிலையையோ வெளிப்படுத்தலாம் என்று நினைத்தால் தமிழ்நாடு அரசியலில் புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம் என தெரிவித்தார்.
பராசக்தி படம் வரலாற்று படமா?, சரித்திரத்தைப் படித்தவர்களும் ஆராய்ச்சி செய்தவர்களும் தான் இந்த படத்தை எடுத்துள்ளார்களா? என்றும் கேள்வி எழுப்பிய அவர் பராசக்தி பட குழுவினர் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளட்டும் ஆஸ்கர் விருதுக்கு கூட படத்தை பரிந்துரைக்கட்டும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை அது ஒரு Irrelevant Issue என்றார். தெரு நாய் பிரச்சனைகள், ரேபிஸ் உயிரிழப்பு, குப்பை அள்ளாதது, கல்விகட்டணம் உயர்வு, படித்தவர்களுக்கு வேலை கிடைக்காதது எல்லாம் Relevant Issue என்றும் படத்தில் உள்ளது எல்லாம் Relevant Issue கிடையாது என்றார்.
மேலும் எந்த படத்தையும் தடை செய்ய வேண்டாம் மக்களுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியும் எனவே இதையெல்லாம் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் படம் பார்க்க விரும்புபவர்கள் சென்று பார்ப்பார்கள் என தெரிவித்தார்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது சமீப காலமாக கிடையாது என தெரிவித்த அவர் அது ஒரு எதார்த்த எதிர்பார்ப்பு என்றார். எந்தக் கட்சி ஆட்சி அதிகாரம் வேண்டாம் என்று தேர்தலில் நிற்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர் எந்த அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும் ஜெயிக்க வேண்டும் அதற்காக தான் தேர்தலில் நிற்கிறார்கள் என தெரிவித்தார்.
1967 லிருந்து காங்கிரஸ் கட்சி நேரடி ஆட்சியில் இல்லை என்பது உண்மைதான் அதற்கு பின்பு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை நழுவ விட்டோம் என குறிப்பிட்ட அவர் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது எந்த கட்சிக்கு தான் இல்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
கூடுதலான தொகுதிகள் கேட்பதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு 234 தொகுதிகள்தான் தமிழ்நாட்டில் உள்ளது, எனவே அதற்குள் தான் நாம் அடங்கிக் கொள்ள வேண்டும் அது போக போக தான் தெரியும் ஆனால் யாராக இருந்தாலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார். விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு குறித்தான கேள்விக்கு நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் ராகுல் காந்தி ஆதரவு அளிப்பார் என்றும் அது தனி மனித சுதந்திரமாக இருந்தாலும் சரி கருத்து சுதந்திரமாக இருந்தாலும் சரி என்றார்.
விஜய்க்கு ஓட்டு வரும் அதில் சந்தேகமே கிடையாது என தெரிவித்த அவர் ஆனால் ஓட்டு சீட்டாக மாறுமா என்று சொல்லத் தெரியாது, ஆதரவே ஓட்டாத மாறாது ஓட்டுகளே சீட்டாக மாறாது எனவும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் ரசிகர் மன்றமாக இருப்பதால் சூப்பர் ஸ்டாரை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வருவதாகவும் கொள்கை பிரகடனத்தை கேட்பதற்காக ஒன்றும் அந்த கூட்டம் வரவில்லை விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது எனவே அவர்கள் வருகிறார்கள் என தெரிவித்தார்.
தற்பொழுது அரசியல் கட்சிகளின் மேடை பேச்சுகளை கேட்பதற்கு மக்கள் பெரிதும் விரும்புவதில்லை என்றார். கிரிக்கெட்டில் கூட மேட்ச் பார்ப்பதற்கு செல்வதை காட்டிலும் பயிற்சி எடுப்பதை காண்பதற்கு கூட தான் கூட்டங்கள் சென்றது என்றார். விஜயை அரசியல் கட்சியாக தான் பார்ப்பதற்கு அதிகப் பேர் வருகிறார்கள் என்று அருண் சக்கரவர்த்தி தெரிவித்திருப்பது குறித்தான கேள்விக்கு, அனைவருக்கும் ஒரே சிந்தனை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஒவ்வொருவரும் அவரது கருத்துக்களை தெரிவிக்கலாம் என பதிலளித்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துச் சென்றார்.

