கோவை: கோவை மாநகரில் போதை அரக்கனின் பிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குச் சாட்சியாக, இளைஞர்கள் கூட்டாக அமர்ந்து போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“டேய் வலிக்குதுடா… வலிக்குதுடா” என ஒரு இளைஞன் வலியால் அலறும் காட்சி இடம்பெற்றுள்ள இந்த வீடியோ, கோவையின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதோடு, பெற்றோர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவர்களிடம் சிக்காமல் இருக்க இளைஞர்கள் தற்போது புதிய மற்றும் விபரீதமான முறைகளைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மருந்துக் கடைகளில் கிடைக்கும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, அவற்றை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நேரடியாக நரம்புகளில் செலுத்தும் ‘கொடூர’ பழக்கத்திற்கு சில இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர்.
இத்தகைய போதை ஊசிகள் உடனடியாக மூளையைத் தாக்கி போதையை ஏற்படுத்தினாலும், ரத்த நாளங்களைச் சிதைத்து உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதியில் அமர்ந்துள்ள சில இளைஞர்கள், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் ஊசி செலுத்திக் கொள்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்களைக் குறிவைத்து, தங்கும் விடுதிகள் மற்றும் தனி அறைகளில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
VIDEO
போலீசார் கல்லூரி தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், போதை மருந்துகளை விநியோகிக்கும் கும்பலை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார்? அவர்களுக்கு போதை மருந்துகளை வழங்கும் கும்பல் எது? என்பதைக் குறித்து கோவை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



