கோவை: ஆவாரம்பாளையம் அருகே சோபா நகர் பகுதியில் லிப்ட் கேட்ட நபரை நம்பி வண்டியில் ஏற்றிய கோவில் பூசாரிக்கு, அவரது புதிய இருசக்கர வாகனத்தையே மர்மநபர் அபேஸ் செய்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் சோபா நகர் பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர், நேற்று அதிகாலை 4 மணி அளவில் புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கணபதி காவலர் குடியிருப்பு செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் கை காட்டி வண்டியை நிறுத்தினார்.
தான் காவலர் குடியிருப்பு வரை செல்ல வேண்டும் என உதவி கேட்டதால், பூசாரியும் அவரை வண்டியில் ஏற்றி சென்றார். வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த நபர் பூசாரியிடம் பேச்சு கொடுத்து, “வண்டி சூப்பரா இருக்கு… நானும் இதுபோல ஒரு பைக் வாங்க நினைக்கிறேன், கொஞ்சம் ஓட்டிப் பார்க்கட்டுமா?” என கூறி வண்டியை ஓட்டினார்.
காவலர் குடியிருப்பு அருகே வந்ததும், வண்டியை நிறுத்தி பூசாரியை இறங்கச் சொல்லி, பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பைக்குடன் தப்பி ஓடிவிட்டார்.
வீடியோ காட்சிகள்
கண் இமைக்கும் நேரத்தில் தனது புதிய பைக் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாருடன், சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த காட்சிகளை வைத்து போலீசார், லிப்ட் கேட்டு வண்டியை திருடிச் சென்ற மர்மநபரை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



