கோவை: பேரூர் குளக்கரையில் போதை உபகரணங்கள் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கல்வி மையமாகவும், தொழில் நகரமாகவும் திகழும் கோவையில் இளைய தலைமுறை சீரழிக்கும் வகையில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது போதை கலாச்சாரம்.
முன்பெல்லாம் கஞ்சா அல்லது போதைப் பொருட்கள் என்றால் அதன் தோற்றம் அல்லது வாசனையை வைத்து எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் தற்போது மற்றவர்கள் துளியும் சந்தேகப்பட முடியாத வகையில் டிஸ்கைஸ்ட் டிசைன் (Disguised Design) எனப்படும் ஒரு மறைப்பு வடிவங்களில் இந்த கருவிகள் சந்தைக்கு வந்து உள்ளன பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லிப்ஸ்டிக், சிறிய டார்ச் லைட், பார்ப்பதற்கு அலங்காரப் பொருட்கள் போன்ற தோற்றத்தில் இருக்கும் பொருட்களைக் கொண்டு கஞ்சாவை மறைத்து புகைப்பதற்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
இது தவிர மெத்தம்பெட்டமைன், போதை ஊசிகள், மாத்திரைகள் என ஏராளமான போதை வஸ்துகள் கோவையில் தாரளமாக புழங்கி வருகின்றன.
பேரூர் குளக்கரை

இந்நிலையில் பயன்படுத்தப்பட்ட பல போதை வஸ்துகளின் உபகரணங்கள் பேரூர் குளக்கரையில் வீசப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளக்கரையில் மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு சில போதை ஆசாமிகள் நுழைந்து போதைப் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும், அங்கு தராசு, வாட்டர் கேன், குழாய்கள் போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்தும் பொருட்களும் வீசப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

