கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது.
கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் அமைந்து உள்ள விவசாயத் தோட்டம் ஒன்றிற்குள், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலாவி கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அன்னூர் வட்டார மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
விவசாயி ஒருவரின் தோட்டத்து வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமராவில் சிறுத்தை, சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி இரை தேடி உலா வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
காலையில் தோட்டத்திற்குச் சென்று சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த விவசாயி, இந்த நடமாட்டத்தைக் கண்டுள்ளார். ஊருக்கு மிக அருகில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை உலாவி வரும் நிலையில் ஊருக்குள் புகுவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




