கோவை: கோவையில் தன்னைச் சந்திக்க அரசு வழங்கிய லேப்டாப்புடன் காத்திருந்த கல்லூரி மாணவிகளை, வண்டியில் இருந்து இறங்கிச் சென்று சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்திபுரம் பகுதியில் பெரியார் அறிவுலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு போத்தனூர் பகுதியில் உள்ள காந்தி மியூசியம் சென்றார்.
அப்போது சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி அருகே, அரசு வழங்கிய மடிக்கணினிகளுடன் நூற்றுக்கணக்கான மாணவிகள் சாலையோரம் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்த முதலமைச்சர், உடனே தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
முதல்வரிடம் அம்மாணவிகள் மடிக்கணினி வழங்கியதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும், பல்வேறு மாணவிகளும் பொதுமக்களுக்கும் முதல்வருக்கு கைக்கொடுத்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
அனைவரது வரவேற்பையும் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அங்கிருந்து போத்தனூர் காந்தி மியூசியம் புறப்பட்டார்.

