கோவை: கோவையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 159 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 509 பள்ளிகளை சேர்ந்த 18,861 மாணவர்கள் மற்றும் 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 1,237 தனித்தேர்வர்களும் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.
தேர்வுகள் நடைபெற மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளது. வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்க 11 பாதுகாப்பு மையங்களில் 22 அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள சிலிண்டர் ஏஜென்சி நிர்வாகிகளுடன் கடந்த சனிக்கிழமை கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது கோவை மாவட்டத்தில் உடனடி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அத்தகைய நிலை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் மதிய உணவு அருந்திய மாணவர்கள் உடல் உபாதை காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில், அனைத்து பள்ளிகளிலும் உள்ள சமையல் அறைகள் மற்றும் வளாகங்களை முழுமையாக சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளோம். மேலும், பள்ளிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.

