கோவை: இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அண்மையில் ரயில்வே வாரியம் 14.8 லட்சம் பணியிடங்களில் இரண்டு சதவிகிதத்தை நடப்பு ஆண்டில் குறைக்க முடிவெடுத்திருப்பதற்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் ஒருபுறம் ரயில்கள் சேவை அதிகரித்தாலும் வேலையாட்கள் குறையும் சூழல் நிலவும் என பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா ரயில்வே துறை கடந்த 26ஆம் தேதி 30 ஆயிரம் பணியிடங்களை காலி செய்துள்ளார்கள் ஏற்கனவே ரயில்வே துறை தனியாருக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் வேலை வாய்ப்புகளையும் மறுத்துள்ளதாக தெரிவித்தார்.
ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்படி இருக்கும் பொழுது வேலை ஆட்களை குறைப்பது காலி செய்வது என்பது ரயில்வே துறையை அழிக்கின்ற செயல் என்று தெரிவித்தார்.
பல்வேறு பட்டதாரிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது பிரதமர் மோடி இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு 30000 பணியிடங்களை காலி செய்து உள்ளார் என்று தெரிவித்தார். எனவே உடனடியாக மத்திய அரசு முப்பதாயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மேலும் பொது துறையை பாதுகாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



