கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருப்பூர் வாலிபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (33), கடந்த 2025ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறைச்சாலையின் 7வது பிளாக்கில் உள்ள அறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த கார்த்திகேயனை சிறை காவலர்கள் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர் அங்கு கொண்டு செல்லப்பட்ட கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய தொடர்பான பிரச்சினையால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் சிறை வார்டன் திருமலை புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.



