கோவை : வாக்கு எண்ணிக்கை நாளில் கோவையில் சட்டவிரோதமாக மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து 268 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையடுத்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், சிலர் மதுபாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலையில் விற்பனை செய்தனர். ரூ.150 மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் ரூ.300 வரை விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். கடைவீதி, வெரைட்டிஹால் ரோடு, சாயிபாபா காலனி, போத்தனூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மது விற்பனை நடைபெற்றது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபுதேவா (26), பொன்னையராஜபுரத்தை சேர்ந்த ஜிபான் (23), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (35), ஜெய்சங்கர் (43), ராஜ்குமார் (45), ராமநாதபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (42), நவநீதகிருஷ்ணன் (30), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் (41) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 268 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



