கோவை: மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டம் விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்துடன் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, பெருந்தலைவர் காமராஜரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.
இதனால் மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் மாமன்றத்தில் மு.க.ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் மாநகராட்சியில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பின்னர் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி சிறப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
தீர்மானம்
அதில், கோவை மாநகரின் எதிர்கால வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசல் குறைப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பான, விரைவான போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, மக்கள் தொகையை காரணம் காட்டி நிலுவையில் வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி செயல்படுத்த, முந்தைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிய உறுதியுடன், எந்த சமரசமும் இன்றி தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு மாமன்றத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


