கோவை: கோவையில் இரவில் சாலை மறியல் பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் அருகே, பாலசுப்ரமணியம் நகரில் மக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகளைச் செய்து தராமல் இருப்பதாக கூறி கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, புலியகுளம் மற்றும் சவுரிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாகவே போதிய உள்கட்டமைப்பு மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையான மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலசுப்ரமணியம் நகர் பகுதி மக்கள், இரவு ஒன்றாக திரண்டு புலியகுளம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர்.
அப்போது, “மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தவறிய தவறுகளுக்கு எங்களை ஏன் தடுக்கிறீர்கள் ?” என்று கூறி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் பரபரப்பான சூழல் உருவானதை அடுத்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்குக் காவல்துறை தரப்பில் இருந்து அவசரத் தகவல் அனுப்பப்பட்டது. பின்னர் வந்த அதிகாரிகள், பாலசுப்ரமணியம் நகர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் புதிய கழிப்பிட வசதிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்கித் தருவதாகப் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் இந்தச் பேச்சுவார்த்தையை ஏற்றுப் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.


