கோவை: கோவை மாவட்டத்தில் 21 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் இருசக்கர வாகன நிறுத்தம் அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபிதீன நாயக் (20), மர்னதா நாக்(28) ரிங்கி டிகால்(26) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.



