கோவை : கோவை சரவணம்பட்டி அருகே கல்லூரி மாணவரை தாக்கி அவரது செல்போனை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கிஷோர் (19). இவரது நண்பரான பிரின்ஸ் ராகவன், ஆனைகட்டி அருகேயுள்ள சோமையனூரைச் சேர்ந்தவர். அவர் கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பிரின்ஸ் ராகவன், நண்பர் கிஷோரை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சரவணம்பட்டி காந்தி சாலை பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (22), பிரின்ஸ் ராகவனிடம் அவரது செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர், பிரின்ஸ் ராகவனை தாக்கியுள்ளார். இதைப் பார்த்த கிஷோர் தட்டிக்கேட்டபோது, அவரையும் அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் போலீசுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியதும், மேலும் ஆத்திரமடைந்த சௌந்தர், பிரின்ஸ் ராகவனின் செல்போனை பறித்து தரையில் வீசி உடைத்துவிட்டு, மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கிஷோர், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய சௌந்தரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


