கோவை: அமைச்சர் சரத்குமாரை கண்டித்து துடியலூர் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
துடியலூர் அருகே போதைப் பொருள் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக்கழக அமைச்சர் சரத்குமார் பதவி விலக்கோரி திமுக மாணவர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.
தமிழக வெற்றிக் கழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் பவுடர் போன்ற ஒரு பொருளை தனது மொபைல் போனின் மீது வைத்து பொடியாக்கிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியது. அது போதைப் பொருள் என பலரும் சமூக வளைதளத்தில் கூறி வந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீடியோ வெளியிட்டார். அதில் குழந்தைக்கான மாத்திரையை பொடி செய்த வீடியோ என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக சார்பில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் திமுக மாணவர் அணி சார்பில் மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் தவெக அரசிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திமுகவினர் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


