கோவையில் Passport Size போட்டோ கட்டணம் உயர்வு; அறிவித்த ஸ்டுடியோக்கள்

கோவை: கேமரா, டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்சார் உபகரணங்களின் விலை உயர்வால், கோவையில் புகைப்பட ஸ்டுடியோக்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்திற்கான கட்டணம் இனி ₹200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Advertisement

கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக கேமரா, லென்ஸ், கணினி, ஹார்ட்டிஸ்க், SSD, மெமரி கார்டு, ஆல்பம், பிரிண்டிங் பொருட்கள், பிரேம்கள், மின்சார கட்டணம், இணைய வசதி, கடை வாடகை மற்றும் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட தொழில்சார் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும், Adobe Creative Cloud, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மென்பொருட்கள் மற்றும் Cloud Storage போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கான சந்தா கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளதால், ஸ்டுடியோக்களின் செயல்பாட்டு செலவுகள் பெரிதும் அதிகரித்துள்ளதாக கூறினர்.

Advertisement

இந்தச் செலவின உயர்வு காரணமாக பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான புகைப்பட ஸ்டுடியோக்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்தது.

அண்டை மாநிலமான கேரளாவில் எட்டு பிரதிகள் கொண்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்திற்கு ₹350 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், கோவையில் பல ஆண்டுகளாக சுமார் ₹180-க்கு வழங்கப்பட்டு வந்த சேவையை தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ₹200 ஆக மட்டுமே உயர்த்தியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

இந்தக் கட்டண உயர்வு அதிக லாபத்தை நோக்கியதல்ல என்றும், தரமான சேவையை தொடர்ந்து வழங்குவதற்கான குறைந்தபட்ச அவசியம் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

குடும்ப நிகழ்வுகள், திருமணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய தருணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் உள்ளூர் புகைப்பட ஸ்டுடியோக்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், புதிய சேவைக் கட்டண அட்டவணை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு, ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், புகைப்படத் தொழிலின் தரம், நம்பகத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக சங்கம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 தலைவர் அந்தோனி ராஜ் விளக்கமளித்தார்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...