கோவை: கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்து முகாம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாமில் சுமார் 250 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடமும் 08.07.2026 முதல் 21.07.2026 வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
அந்தவகையில், இன்று மத்திய மண்டலம், சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் சுமார் 250 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு, இருதயம், நுரையீரல், கண்பல், எழும்பு மூட்டு மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம், தோல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம்.
மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நல மருத்துவம், ஹீமோ குளோபின் அளவு கண்டறிதல்,இரத்த வகை கண்டறிதல், இரத்த சக்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, பித்த திரமி, யூரியா கிரியட்டினின், வி.டி.ஆர்.எல். எச்.ஐ.வி மாதிரி பரிசோதனை, இ.சி.ஜி ஸ்கேன் கர்ப்பபை வாய் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மேல்சிகிச்சைக்காக இம்முகாமில் பரிந்துரை செய்யப்பட்டது.
நாளைய தினமும் சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இன்று நடைபெற்ற இம்முகாமில் மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





