கடந்த வாரம் இயக்குநர் பாக்யராஜ் திடீரென உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள், திரையுலகில் மற்றொரு பேரதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார். இது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ள அவரைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
இசைப் பயணத்தின் தொடக்கம்
‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த இவரின் திறமையை அறிந்த இசை பயிற்றுநர் பைடிசாமி, தானாக முன்வந்து இசையை கற்றுக் கொடுத்தார். இயல்பாகவே நல்ல குரல்வளம் கொண்ட ஜானகி, ஆல் இந்தியா ரேடியோ நடத்திய பாட்டுப் போட்டியில் பங்கேற்று 2வது பரிசை வென்றார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்த அவருக்கு “விதியின் விளையாட்டு” என்ற படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தப் படம் வெளியாகாததால் அவர் உடைந்து போனார்.
ஏவிஎம் முதல் இளையராஜா வரை
அதன்பிறகு, 1957ம் ஆண்டு வெளியான “மகதல நாட்டு மேரி” என்ற படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். வாய்ப்புகளைத் தேடி அலைந்த அவருக்கு ஏவிஎம் நிறுவனத்தின் மூலம், பி. சுசிலா போன்ற பாடகர்களைப் போல, மாதச் சம்பளத்திற்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம், தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பாடல்களைப் பாடி அசத்தினார்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி ஆகியோரின் படங்களில் பாடிய பல பாடல்கள் மெகா ஹிட்டானது. தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்த ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கினார். அன்னைக்கிளி திரைப்படம் ஜானகியின் இசைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் தலைமுறையிலும் கலக்கிய குரல்
70ஸ்,80ஸ்,90ஸ்களை கவர்ந்த இளையராஜாவுடன் மட்டுமல்ல, தற்போதைய டிரெண்டிங்கில் உள்ள ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் ஏராளமான வெற்றிப் பாடல்களைப் பாடினார். ஜென்டில்மேன், காதலன், உயிரே, சங்கமம், ஜோடி, முதல்வன் உள்ளிட்ட படங்களில் அவரது குரல் புதிய தலைமுறையையும் கவர்ந்தது.
17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்கள்
டி.எம்.எஸ்., யேசுதாஸ், எஸ்.பி.பி., மனோ, உன்னி கிருஷ்ணன், சங்கர் மகாதேவன், ஹரிஹரன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களுடன் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 17 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட மொழியிலேயே அதிக பாடல்களைப் பாடியுள்ளார். தெலுங்கு படமான மவுனப் போராட்டம் திரைப்படத்திற்கு அவரே பாடல்கள் எழுதி, இசையமைத்ததும் பலருக்கும் தெரியாத தகவலாகும்.
என்றும் மறக்க முடியாத ஹிட் பாடல்கள்
‘ஜல் ஜல் ஜல்’ (சலங்கை ஒலி), உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பட்டுவண்ண ரோசாவாம், மச்சான பாத்தீங்களா, செந்தூரப் பூவே, புத்தம் புது காலை, ராசாவே உன்ன நம்பி, பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா, ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான், கண்மணி அன்போடு காதலன் உள்ளிட்ட பாடல்கள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும்.
விருதுகள்… ஆனால் ஏற்க மறுத்த பத்மபூஷண்
இசைத்துறையில் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு தடம் பதித்துள்ள ஜானகி, கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்தார். பாரத ரத்னா விருதுக்குத் தான் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மறைந்த பாடகி 4 தேசிய திரைப்பட விருதுகளையும், 33 மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
இறுதி அஞ்சலி ஏற்பாடுகள்
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள ஜானகியம்மாள், வயது முதிர்வு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், மைசூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
ஜானகியின் உடல் நாளை (ஜூலை 12) காலை 7.30 மணி முதல் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை கனியனஹூந்தி தோட்டத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





