கோவை : வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 3 பேர் சிக்கினர்.
கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை வாளையார் சோதனைச்சாவடியில் வணிக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினமும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், அங்கு முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர் அருள்தாஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் கல்பனா, பத்மா ஆகியோரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும், அந்த தொகை எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சோதனைச்சாவடியில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





