கோவை:தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கோவையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வரும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், நேற்று கோவை வந்தார்.
முதலில் ரேஸ்கோர்ஸில் உள்ள மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்துக்குச் சென்ற அவர், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன், எட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்பிக்கள்) மற்றும் மூத்த காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த டிஜிபிக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் பிற காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாநகரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம், போக்குவரத்து மேலாண்மை, விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





