கோவை:கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் நடைபெற்ற கூட்டுக் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக, தனியார் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 15ஆம் தேதி, மதுக்கரை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி எல்&டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூவர், வீட்டின் முன்பு நின்று கைப்பேசியில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவர்களை மிரட்டி வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது.
பின்னர் மேலும் நான்கு பேரை அங்கு வரவழைத்து, வீட்டில் இருந்த தோசைக்கல்லால் ஒருவரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வீட்டில் இருந்த நான்கு கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 17) மதுக்கரை அருகே பதுங்கியிருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு மடிக்கணினி, நான்கு கைப்பேசிகள் மற்றும் ஒரு ரோலக்ஸ் கைக்கடிகாரம் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





