கோவை: கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் இன்று அதிகாலை நடத்திய அதிரடி சோதனையில், ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட 12 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களை குறிவைத்து ஒருங்கிணைந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.
Also Read: கோவை ITI-யில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிப்பு…
இதற்காக அனைத்து காவல் உட்கோட்டங்களிலும், டிஎஸ்பி.க்கள் தலைமையில் சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, சரித்திர பதிவேடு நபர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் இருப்பிடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 12 ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் கண்டறியப்பட்டு காவல்துறையினரால் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அண்மைக்காலங்களில் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா, சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கோவையில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பளிப்பாணைகளை வழங்கிய அமைச்சர் மதன்ராஜா…
விசாரணையின் முடிவுகள் மற்றும் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவை மாவட்டம் முழுவதும் ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு எதிரான திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.





