கோவை: கோவை மாநகர போலீசார் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 18 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 4ம் தேதி காலை 10 மணிக்கு கோவை அவினாசி சாலையிலுள்ள கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வாகனங்களை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் ஏலம் எடுக்க பார்வையிட, வரும் 1ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்படும்.
ஏலம் எடுக்க விரும்புவோர் 3ம் தேதி மாலை 5 மணி வரை கோவை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம்.
மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு ரூ.1000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். வைப்புத்தொகை செலுத்தி பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலம் எடுப்பவர்கள் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் மற்றும் இரண்டு சக்கர வாகனத்திற்கு 12 சதவீத ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து முழு தொகையையும் அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கோவை மாநகர வாகனப்பிரிவு அலுவலக தொலைபேசி எண்: 0422-2241795 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





