கோவை: மேட்டுப்பாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக சக தொழிலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பீகார் மாநில தொழிலாளர்கள் இடையே மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிசி யாதவ் (26), மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் தங்கி கூலித் தொழிலாளராக பணியாற்றி வந்தார். அதே தொழிற்சாலையில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் (42), உஜித் (40) ஆகியோருடன் கடந்த ஜூலை 16-ஆம் தேதி இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது.
Also Read: கோவையில் மோதிக்கொண்ட இந்திய-மலேசிய வீரர்கள்!
அப்போது, மதுபோதையில் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியதில், அஜித் மற்றும் உஜித் இருவரும் சேர்ந்து பிசி யாதவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் தொழிற்சாலைக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிசி யாதவின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Also Read: கோவை போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்; எப்போது?
விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் போது அஜித் மற்றும் உஜித் ஆகியோர் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்ததை தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு உயிரிழப்பில் முடிந்த இந்த சம்பவம், தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மற்ற தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





