கோவை: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கிருந்து பாப்பநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் தனியார் மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரும் கலந்து கொள்ள உள்ளார்.
நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, துணை ஜனாதிபதி மாலை காரில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, இரவு 11.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நேற்று (ஜூலை 21) காலை 11 மணி முதல் நாளை (ஜூலை 23) காலை 11 மணி வரை 48 மணி நேரத்திற்கு உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வானூர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், துணை ஜனாதிபதியின் பாதுகாப்பை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





