கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோவையில் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் திமுக அலுவலகத்தில் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கோவையிலும் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வனின் ஆதரவுடன், கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது. மதியம் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை செந்தமிழ் செல்வன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும், மாணவர்களின் கோரிக்கைக்கு திமுக தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.
போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிதி கூறுகையில், கடந்த காலங்களில் மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதனால் திமுக அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை இரவு, பகலாக தொடர்ந்து நடைபெறும் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தாத மாநில அரசையும் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பகுதி கழக செயலாளர் டெம்போ சிவா, ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ரஷல், விக்டர், ஆதவ், ஜான், அப்துல், யுவன், மகேஷ், தாஹா, நூரா உள்ளிட்டோர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.





