கோவை: ஆடிட்டரை மிரட்டி பணம் பறித்தது குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய திருநங்கைகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர் அருகே உள்ள காலி இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர், ஆசை வார்த்தைகள் கூறி அவரை அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்றதும், மறைந்திருந்த மேலும் சில திருநங்கைகள் ஆடிட்டரை திடீரெனச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள், ஆடிட்டரிடம் அந்த திருநங்கையுடன் இருந்ததை புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
போலீசில் புகார்
மேலும், அவரிடம் இருந்து ஜி-பே (GPay) மூலம் ரூ.11,700 பறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய ஆடிட்டர் இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், சிறப்பு எஸ்.ஐ. மற்றும் தலைமைக் காவலர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், போலீசார் பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், கீழே கிடந்த கற்களை எடுத்து வீசி, ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். தொடர்ந்து தலைமைக் காவலர் செல்வராஜின் சட்டையை கிழித்து தாக்கியுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறப்பு எஸ்.ஐ., பலத்த காயமடைந்த செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், போலீஸ்காரரை தாக்கியது திருநங்கைகள் மொபீனா (27), மகதி (21), இனியா (22), ஆரஞ்ச் (21) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
Also Read: லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





