கோவை: வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளலூர் பேரூராட்சியில் கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மாநகரின் 100 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த குப்பைக் கிடங்கால் பொதுமக்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்த குப்பைக் கிடங்கை அகற்ற தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், வெள்ளலூர் பேச்சியம்மன் கோயில் அருகே கப்பினிய கவுண்டர் வீதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக சுற்றுவட்டாரங்களில் சேகரமாகும் குப்பைகள் அங்குள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே குப்பைக் கிடங்கால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் மக்கள், பேரூராட்சி மற்றும் மாநகராட்சியின் இந்த செயலால் கடும் கொதிப்படைந்தனர்.
சாலை மறியல்
இந்த சூழலில், குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கக் கூடாது என்றும், இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை வெள்ளலூர்–போத்தனூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Also Read: கோவையில் காட்டிக் கொடுத்தது காவல் தெய்வம்!
மேலும், அப்பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படாது என்றும், இரண்டு வாரங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் உறுதியளித்த நிலையில், பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக போத்தனூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.





