கோவை: கோவையில் வோக் மாடல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவையை மையமாக வைத்து வோக் மாடல் என்ற மாடலிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்கள் பல்வேறு மேடைகளை அலங்கரித்து வருகின்றனர்.
இந்த சூழலில், வோக் மாடல் நிறுவனம் சார்பில் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த ஆணழகன் போட்டியில் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு “கோவை ஃபேஷன் குரு” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் சில்பா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடல்களை நாம் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளோம். இந்த போட்டியைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. பெண்களுக்கு பல துறைகளில் பாதுகாப்பு இல்லை என்பது உண்மைதான். நானும் ஒரு பெண் என்ற அடிப்படையில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.” என்றார்.
இந்த போட்டியில் நடுவர்கள் மற்றும் மாடல்களான சரண், பூபதி, ஸ்ரீநாத், பிரவீனா, இம்ரான், சபீதா மற்றும் செரி மேக் ஓவர் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.





