கோவை: கோவையில் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவனை சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது மகனின் இந்த நிலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அமுதன் (20) கோவை-பொள்ளாச்சி சாலை பிரிமியர் மில் அருகில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்றிரவு அமுதன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களை வழி மறித்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பிற இளைஞர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் அமுதனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளது.
அதில் அமுதன் பலத்த காயம் அடைந்த நிலையில் உடன் வந்த நண்பரும் மற்றொருவரும் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பொழுது வழியிலேயே அமுதன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து செட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் உடலை மீட்டு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அமுதன் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவன் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கை படித்ததாகவும் இரண்டாம் ஆண்டு உணவு சரியில்லாததால் வெளியில் அரை எடுத்து தங்கியதாகவும் மீண்டும் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது படிப்பு காரணமாக கல்லூரி விடுதியிலேயே சேர்ந்ததாக அமுதனின் பெற்றோர் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு அமுதனும் விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவனும் விடுதிக்கு பின்புறம் செல்லும் பொழுது அங்கு விடுதியின் சமையல்களாக பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் கல்லூரி நிர்வாகம் அமுதனையும் அந்த மாணவரையும் விடுதியில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் பின்னர் அந்தப் பிரச்சினை முடிந்து மீண்டும் அமுதன் கல்லூரி விடுதியில் தங்கிய நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என்று கூறியுள்ள அமுதனின் பெற்றோர் வட மாநில தொழிலாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையின் பொழுது கல்லூரி நிர்வாகம் அமுதனிடம் கல்லூரி விடுதியில் போதை பொருள் விளக்கம் குறித்து விசாரணை நடத்தி சில தரவுகளை சேகரித்ததாகவும் அந்த தரவுகளை அமுதன் தான் கொடுத்தான் என்று அந்த கும்பலுக்கு தெரிய வந்ததால் தான் அந்த கும்பல் அமுதனை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் தனது மகனிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் அவனை விடுதியில் இருந்து வெளியேற்றாமல் இருந்திருந்தாலே அமுதனுக்கு இந்த நிலை வந்திருக்காது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ள பெற்றோர் அந்த கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.





