கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ.35 கோடியில் நவீன வசதிகளுடம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுகிறது.
கோவையின் முக்கிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ரூ.35 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்பூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கும், மேட்டுப்பாளையத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து நிலையம் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தாலும் இங்கு கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கட்னத 1971ல் இருந்து பயன்பாட்டில் இருந்து வருவதால், கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன.
மேலும், பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் வந்து செல்வதால், பேருந்துகளை இயக்குவதிலும் நெரிசல் ஏற்படுகிறது.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தை தினமும் சுமார் 1.2 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருவதாகவும், சுமார் 998 பேருந்துகள் வந்து செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தற்போதைய கட்டமைப்புக்கு பதிலாக எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) தொழில்நுட்ப குழுவின் ஆலோசனையும் மாநகராட்சி நிர்வாகத்தால் பெறப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.35 கோடி மதிப்பில் நவீன முறையில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்?
புதிய பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் 2,014 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. தரைத்தளத்தில் பேருந்துகள் நுழையும் மற்றும் வெளியேறும் வசதிகள் அமைக்கப்படுவதுடன், 4 பிளாட்பார்ம்களில் ஒரே நேரத்தில் 70 பேருந்துகளை நிறுத்தும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
முதல் தளத்தில் பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதியுடன் 5 காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 45 கடைகள், 6 கழிப்பறைகள், 3 டிக்கெட் கவுன்டர்கள், லாக்கர் அறை, பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற உள்ளன.
இதுதவிர, ஆடியோ-வீடியோ அறை, துறை அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை ஆகியவையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு தேவையான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
புதிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், பயணிகள் எளிதாக கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர 6 இடங்களில் படிக்கட்டு வசதியும், லிப்ட் வசதியும் அமைக்கப்பட உள்ளது.
காத்திருக்கும் மாநகராட்சி

புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதற்கான அனுமதிக்காக மாநகராட்சி நிர்வாகம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அனுமதி கிடைத்த பின்னர், மாநகராட்சி மன்றத்தில் ஒப்புதல் பெற்று கட்டுமானப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
Also Read: மீண்டும் திறக்கப்படும் கோவை குற்றாலம்- வனத்துறை அறிவிப்பு…
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் கோவையின் முக்கிய போக்குவரத்து மையமாக இருப்பதால், புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் பேருந்து போக்குவரத்தை எவ்வாறு கையாள்வது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. குறிப்பாக திருப்பூர், மேட்டுப்பாளையம், சத்தி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காந்திபுரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், பயணிகளுக்கான காத்திருப்பு வசதி, வாகன நிறுத்தம், டிக்கெட் மையம், கழிப்பறை, பாதுகாப்பு மற்றும் பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிக இடம்
பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும்போது, தற்காலிக பேருந்து நிலையம் அவசியமான ஒன்றாக உள்ள நிலையில், மத்திய சிறைச்சாலை மைதானத்தில் தற்காலில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நுகர்வோர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடனும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து நிலையம் கட்டப்படும் பட்சத்தில் காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் சிறிதளவு குறையும் என்று எதிர்பாக்கலாம்.





