கோவை : காதலித்து ஏமாற்றியதாக கூறி இளம்பெண்ணை கொலை செய்வதற்காக பட்டாக்கத்தியுடன் சென்ற வாலிபரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கோவை பூச்சியூர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (19). இவர் கார் மெக்கானிக் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்ததுடன், வீட்டிற்குச் செல்லாமல் மெக்கானிக் கடையிலேயே தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வடமதுரை-பன்னிமடை சாலையில் உள்ள ஒரு ஒர்க்ஷாப் அருகே ஜெகதீஸ்வரன் ஆவேசமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த துடியலூர் போலீசார், அவரை அருகில் வருமாறு அழைத்தனர்.
ஆனால், போலீசாரை பார்த்ததும் ஜெகதீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் சுமார் ஒரு அடி நீளமுள்ள பட்டாக்கத்தி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஜெகதீஸ்வரன் 19 வயது இளம்பெண் ஒருவரை தீவிரமாகக் காதலித்து வந்ததாகவும், அந்த இளம்பெண் தற்போது காதலை ஏற்க மறுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த இளம்பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டி கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து, ஜெகதீஸ்வரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: மது அருந்த வராத நண்பன்… கோவையில் அதிர்ச்சி… வேலாண்டிபாளையத்தில் வழிப்பறி…
ரோந்து போலீசாரின் துரித நடவடிக்கையால், இளம்பெண்ணுக்கு ஏற்படவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.





