கோவை: கோவையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் தங்களது அறிவியல் மற்றும் கணிதத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை உருவாக்கி காட்சிப் படுத்திருந்தனர்.
மாணவர்கள் வகுப்பறையை சுத்தம் செய்யும் போது அடிபடாமல் இருக்க ஹைட்ராலிக் இயந்திரம், புரொஜெக்டர், செயற்கை அருவி உள்ளிட்ட படைப்புகள் மற்ற மாணவிகளை வெகுவாகக் கவர்ந்தனர்.
கோவை கூட்செட் சாலையில் உள்ள பிரசன்டேசன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தினர்.

பாடப்புத்தகங்களில் படிக்கும் அறிவியல் கோட்பாடுகளை நடைமுறை வடிவில் புரிந்துகொள்ளும் வகையில் மாணவிகளின் திட்டங்கள் அமைந்திருந்தன.
கணிதப் பிரிவிலும் பல்வேறு புதுமையான படைப்புகள் இடம்பெற்றன. குறிப்பாக, ஒரு நிறுவனத்தை எவ்வாறு நடத்துவது, அதன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தில் கணிதத்தின் பயன்பாடு உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் மாணவிகள் திட்டங்களை உருவாக்கியிருந்தனர்.
கண்காட்சியை பள்ளியில் பயிலும் மற்ற மாணவிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஒவ்வொரு படைப்பின் நோக்கம், அதன் செயல்பாடு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அறிவியல் அல்லது கணிதக் கருத்துகள் குறித்து திட்டங்களை உருவாக்கிய மாணவிகள் சக மாணவிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தனர்.
குறிப்பாக மாணவிகள் வகுப்பறையை சுத்தப்படுத்தும்போது, இருக்கைகளை ஏற்றி இறக்கும் விதமாக ஹைட்ராலிக் இயந்திரம், காற்றாலையில் மின்சாரம் தயாரிக்கும் முறைகள், அணு உலையின் செயல்பாடுகள், சென்சார் முறையில் தயாரிக்கப்பட்ட கார்கள் என்று ஏராளமான படைப்புகளை மாணவிகள் உருவாக்கியிருந்தனர்.

இதுபோன்ற கண்காட்சிகள் மாணவிகளின் பாட அறிவை நடைமுறை அனுபவத்துடன் இணைக்க உதவுவதுடன், சிந்திக்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்துவதாகவும், மேலும், ஒரு திட்டத்தை உருவாக்கி அதை மற்றவர்களுக்கு விளக்கும் அனுபவம், மாணவிகளின் தன்னம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புத் திறனையும் வளர்க்கிறது என்றும் பள்ளி முதல்வர் பள்ளி முதல்வர் ஜோஸ்வின் மேரி தெரிவித்தார்.
குழுவாக இணைந்து திட்டங்களை உருவாக்குவதன் மூலம் குழுப்பணி, பொறுப்பு பகிர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகள் மாணவிகளிடம் வளர வாய்ப்பு உள்ளதாகவும், . கணிதத்தின் மூலம் ஒரு நிறுவனத்தை நடத்துவது போன்ற நடைமுறை சார்ந்த திட்டங்கள், எதிர்காலத்தில் தொழில், நிர்வாகம் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.





