கோவை: கோவை மாவட்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8-வது கொலை அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் திடீரென வந்து சரணடைந்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, இரவு போதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத ஒருவரை வெட்டிக்கொலை செய்து விட்டதாகவும், எனவே அதுதொடர்பாக சரணடைவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சரணடைந்த நபரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த இடம் நீலம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பது தெரியவந்தது.
Also Read: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்த கணவன் மனைவி கைது…
தென்னம்பாளையம் பிரிவில் இருந்து அன்னூர் செல்லும் வழியில், மேம்படையான் ஈஸ்வரன் கோவில் அருகே கொலை செய்யப்பட்டவரின் சடலம் கிடந்தது.
இதுதொடர்பாக நீலாம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், சரணடைந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் அந்த பகுதியில் தொழிற்சாலைகளுக்கு தகர மேற்கூரை அமைக்கும் பணிக்காக இங்கு வந்து தங்கி வேலை செய்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read: கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்…
அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக அந்த நபரை கத்தியால் குத்திக்கொலை செய்து, அருகில் இருந்த புதருக்குள் வீசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார், இந்த கொலையில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்ற வாலிபர் நண்பர்களால் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த காட்சிகளை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பினர்.
தொடர்ந்து பீளமேடு பகுதியில் வேலை தேடி வந்து தங்கியிருந்த வாலிபர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
மேலும், ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
இந்த கொலைகளைத் தொடர்ந்து பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி, சிங்காநல்லூரில் வேலுச்சாமி, சுல்தான்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட செலக்கரைசல் பகுதியில் செந்தில்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி அருகே ராமச்சியம்பாளையத்தில் தேவதாஸ் என்ற வாலிபரும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
கோவையில் ஏற்கனவே 7 கொலைகள் நடந்திருந்த நிலையில், தற்போது 8-வதாக நீலம்பூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு இது சாட்சியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.





